1

Promoters Holding

Promotor என்பவர் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தையும் செய்து, ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பிக்கும் போது, அது தனி நபர் நடத்தும் Proprietorship ஆக இருக்க வேண்டுமா, அல்லது இன்னும் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களை சேர்த்து Partnership ஆக ஆரம்பிக்கலாமா அல்லது நிறுவனத்தை ஒரு Limited Company ஆக ஆரம்பிக்கலாமா என்று
முடிவு செய்து, அதற்கேற்றாற்போல் தன்னுடைய முதலீட்டுக்கான பங்கை செலுத்தி தொழிலை ஆரம்பிப்பார். பொதுவாக ஒரு நிறுவனத்தில் 50%-க்கு அதிகமாக பங்கு இருந்தால் அப்படி பங்கு வைத்திருப்பவர்கள் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் (Majority Shareholding), அந்நிறுவனத்தை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். தன்னுடைய திறமை, நேரம், உழைப்பு அனைத்தையும் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பவர், அது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. அப்படி அதித பங்குகளை ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வைத்திருந்து, நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்திருந்தால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் நம் பணத்துக்கு என்ன உத்திரவாதம் என்று நமக்கு ஒரு சிறிய சந்தேகம் வரலாம். அப்படி நிறுவனத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், பங்கு வெளியிட்டு, பொதுமக்களின் பணத்தை முதலீடாக பெற்று நிறுவனத்தை நடத்தும்போது Promotor தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து விட முடியாது. வருடா வருடம் பங்குதாரர்களின் கூட்டத்திற்கு - Annual General Meeting (AGM) - ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் தான் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். இப்படி ஒருவரோ அல்லது ஒரு குடும்பத்தினரோ அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் போது அவர்களை தவிர நிறுவனத்தில் முதலீடு செய்த மற்றவர்களை Minority Shareholders என்று சொல்கிறோம். இந்த Minority Shareholders-இன் உரிமையை பாதுகாக்க இந்திய நிறுவன சட்டத்தில் இடமிருக்கின்றது(Companies Act 1956). ஆக, ஒரு Promotor என்பவர்தான் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

அப்படி ஆரம்பித்த Promotor, நாளடைவில் மெதுவாக நிறுவனத்தில் இருக்கும் தன்னுடைய பங்குகளை குறைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவருக்கு அந்த நிறுவனத்தில் அதிக நம்பிக்கை இல்லை. நிறுவனத்தில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்கும் என்பதால், இந்த நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் இல்லை என்பது அவருக்கு தெரிந்ததும், மெதுவாக தன்னுடைய பங்குகளை வெளியே விற்க ஆரம்பிப்பார். ஆனால் ஒவ்வொரு காலாண்டிலும், பங்கு சந்தையில் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை தாக்கல் செய்தும் போது, Promoters எவ்வளவு பங்குகள் வைத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். இப்படி தகவலை கொடுக்கும் போது, Promoters பங்குகளை விற்றதை முதலீட்டாளர்கள் இதை தெரிந்து கொண்டால், நிறுவனத்தின் நம்பகத்தன்மை போய்விடுமே என்று பயந்து, அனேக Promoters பங்குகளை விற்பதை விட எளிதாக, வெளியே தெரியாமல் அடகு வைப்பதை வழக்கமாக்கி கொண்டார்கள் - நம்மிடம் இருக்கும் தங்கத்தை வங்கியில் அடகு வைத்து நம்முடைய தேவைக்கு பணத்தை கடனாக பெறுவது மாதிரிதான் இதுவும்!!!. ஏனென்றால், பங்குசந்தையை பொறுத்த வரை Promoters பங்குகளை விற்றால் மட்டுமே பங்குசந்தைக்கு தகவல் கொடுக்க வேண்டும் - அடகு வைத்தால் பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்னும் நிலை இருந்ததால், Promoters பங்குகளை அடகு வைப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அனுபவம் தான் ஆசான் என்று சொல்வதைப்போல, சத்யம் கம்ப்யுட்டர் நிறுவனத்தில் பிரச்னை வந்த பிறகுதான் செபி அமைப்பு (SEBI - Security and Exchange Board of India), பங்குகளை அடகு வைத்தாலும், பங்குசந்தைக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு விதியை நடைமுறைப்படுத்தியது. அப்படி விதிமுறை அமல் படுத்திய பிறகும் நம்முடைய Promoters தாங்கள் பங்குகளை அடகு வைத்த விபரத்தை உடனே சந்தைக்கு தெரிவித்து விடவில்லை. தகவல் தராத நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறேன் என்று செபி மிரட்டிய பிறகுதான் Promoters தாங்கள் அடகு வைத்த பங்குகளின் விபரத்தை சந்தைக்கு தெரிவித்தார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சில Promoters தங்களுடைய அனைத்து பங்குகளையும் அடகு வைத்து விட்டார்கள் என்பது இந்த விதி அமலுக்கு வந்த பிறகுதான் முதலீட்டார்களுக்கே தெரிந்தது.

சரி இதெல்லாம் நடைமுறை விஷயம், இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தவர், அதிலிருந்த தன்னுடைய முதலீட்டை குறைக்கிறார் என்றால், அந்த நிறுவனம் நல்லபடியாக வளர்ந்து, நல்ல லாபம் ஈட்டி, அதன் மூலம் அவரது பங்குகளின் மதிப்பு கூடும் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இதையே வேறு விதமாக யோசித்தோம் என்றால், ஒருவேளை அவருக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம் அல்லது அந்த நிறுவனம் வளராது என்பதை அவர் உறுதியாக நம்புகிறார் என்றும் சொல்லலாம்..!!! இப்படி பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நாம் நமது பணத்தை முதலீடு செய்யலாமா, செய்தால் நம் முதலீட்டின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை இப்பொழுதே சொல்லி விடலாம்!!!

பங்குகளை விற்காமல் சில Promoters அடகு வைப்பார்கள். பங்குகளை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைத்துவிடும் என்று நாம் நினைக்கலாம். உதாரணமாக, ஒரு promoter பத்து ருபாய் முகமதிப்பில் ஒரு லட்சம் பங்குகளில் பத்து லட்ச ருபாய் முதலீடு செய்து, பொதுமக்களிடம் இருந்தும் பணம் திரட்டி நிறுவனம் ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் நல்ல படியாக நடந்து நல்ல லாபம் சம்பாதிப்பதால், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பங்கின் விலை Rs.100 ஆகிறது என்றால் அவருடையை ஒரு லட்சம் பங்கின் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருக்கும். பொதுவாக பங்குகளை அடமானமாக வைத்துக்கொண்டு பணம் கொடுக்கும் வங்கிகள், பங்கின் சந்தை மதிப்பில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை கடனாக கொடுக்கும். ஆக பத்து லட்ச ருபாய் முதலீடு செய்து வங்கி மூலமாக சுமார் 50 முதல் 60 லட்சம் வரை promoter கடன் வாங்கலாம். ஒருவேளை கடனுக்கு வட்டியை கொடுக்காமல் இருந்தால் ஒரு அளவுக்கு மேல் வங்கி அந்த பங்குகளை சந்தையில் விற்று தன்னுடைய கடனை சமன் செய்து விடும். இப்படித்தான் சத்யம் விஷயத்தில் நடந்தது.

சில Promoters பங்குகளை அடகு வைத்துவிட்டு அந்த பணத்தில் அடுத்த நிறுவனம் ஆரம்பித்தேன் என்று சொல்லுவார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை அவ்வளவு எளிதாக நாம் உறுதி செய்துவிட முடியாது. ஆக, Promoters பங்குகளை விற்றாலோ அல்லது அடகு வைத்தாலோ அந்த நிறுவன பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துபவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விஷயம். அவர் ஆரம்பித்த நிறுவனத்தை அவரே பெரிதாக நம்பவில்லை என்னும் போது நாம் மட்டும் எப்படி நம்புவது? பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்று கனவு காணும் முன், நாம் போட்ட பணம் நஷ்டமில்லாமல் நம் கைக்கு திரும்ப கிடைக்குமா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். பங்கு சந்தையில் முதலீடு செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நஷ்டமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். யாரோ சொன்னார்கள் என்று ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்துவிட்டு, அவ்வளவு கஷ்டப்படு சம்பாதித்த பணத்தை இப்படி எளிதாக தொலைத்து விடலாமா? அதனால் லாபத்தை பற்றி கனவு காணும் முன், நஷ்டத்தை தவிர்ப்பது அல்லது முதலீடு பாதுகாப்பானதுதானா என்று ஓரளவு உறுதிபடுத்திக்கொண்டால் நல்லது. எவ்வளவு நல்ல நிறுவன பங்காக இருந்தாலும், சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பங்கின் விலையும் கூடி ... குறைந்து ... மீண்டும் கூடி...இப்படி ஒருவித ஏற்ற இறக்கத்தோடுதான் விலை நீண்ட காலத்தில் கூடுமே தவிர, முதலீடு செய்த நாள் முதல் கூடிக்கொண்டே இருக்காது. அதனால் நல்ல நிறுவன பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கினால் லாபம் அடைய முடியும்.

பங்குகளை விற்பது அல்லது அடகு வைப்பதற்கு மாறாக,சில நிறுவனங்களில் Promoters தன்னுடைய பங்கை கூட்டுவார்கள் - அதாவது ஏற்கனவே இருக்கும் பங்குகளுக்கு மேல் இன்னும் பங்குகளை வாங்கி நிறுவனத்தில் தன்னுடைய முதலீட்டை கூட்டுவார்கள். அப்படி கூட்டுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களில் நாம் முதலீடு செய்தால் நிச்சயம் அந்த முதலீடு நல்ல வருமானம் கொடுக்கும்.


இதுவரை Promoters Holding பற்றி மட்டும் பார்த்தோம். இனி வரும் பதிவில், Shareholding Pattern என்று சொல்லப்படும், நிறுவனத்தின் மூலதனத்த்தில் யார் யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்னும் தகவலை எப்படி பெறுவது, அதை நீண்டகால முதலீட்டுக்கு எப்படி பயன் படுத்துவது என்பது பற்றி பார்போம்

0 comments:

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP