1

சேகுவேரா-5



குயூபாவின் முக்கிய நகரமான ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் பிடல் காஸ்ட்ரோ வழக்கறிஞராக பணியாற்ற துவங்கினார். தங்களது வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்காகவே காஸ்ட்ரோ வாதாடினார். இதனால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. வழக்குகளுக்காக வந்த ஏழைகளிடமிருந்து வாழ்க்கை போராட்டங்களை நேரடியாகவே பிடல் அறிந்துகொண்டார். ஏழைகள் வறுமையில், நோயின் கோரப்பிடியில் தவிப்பதும், செல்வந்தர்கள் ஆடம்பரங்களும், கேளிக்கைகளும் நிரம்பிய மயக்கத்தில் வாழ்வதையும் காஸ்ட்ரோ புரிந்துகொண்டார். சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதமாக அரசின் திட்டங்களும், அமைப்புகளும் செயல்படுவதை அவர் உணர்ந்தார். குயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது.

எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியலில் ஈடுபட வைத்தது. அரசியல் அறிவு வளர்ந்த வேளையில் மக்களுக்காக பணிசெய்ய தீர்மானித்த காஸ்ட்ரோவுக்கு குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு கவர்ந்தது.

காஸ்ட்ரோ 1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார். ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தனர். காஸ்ட்ரோ அதிகமான நேரத்தை கட்சிப்பணியில் மக்கள் பிரச்சனைகளுக்காக செலவிட்டார். அரசாங்க அமைச்சர்கள் அமெரிக்க வர்த்தக நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்று குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. காஸ்ட்ரோவின் ஈடுபாடு குயூபா மக்கள் கட்சியில் மேலும் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான செயலாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்டு இளைய வயதினர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமாக இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளமையும் செயல் திறனும் கொண்ட காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். அந்த வேளையில் குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெறும் நிலை இருந்தது. இந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் இராணுவத்தின் துணையுடன் பாடிஸ்டா நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நடவடிக்கையானது குயூபா மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் தொடர் நிகழ்வுகள் குயூபாவின் வரலாற்றை மாற்றியமைத்தது.

-o0o00o000o00o0o-


அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் (Norton 500 cc motorcycle named La Poderosa II ("The Mighty One, the Second")) வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் தங்களது நீண்ட பயணத்தை துவங்கினர்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிப வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்காவிற்கும் செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். இருவரும் முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய கால அவசரத்தில் பயணத்தை துவக்கினார்கள். பயணம் துவங்கும் முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்துகொள்ள விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். விருந்து முடிந்து ஏர்னெஸ்டோவும், ஆல்பர்ட்டோவும் புறப்பட்ட வேளையில், ஏர்னெஸ்டோவின் அன்னை சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களும் கலங்கியது. விடை பேற்று வீறிட்டு கிழம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனம் பிரிவின் முதல் வலியை உணர துவங்கியது. எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட தனது அருமை மகன் தொலைதூர பயணம் செல்கையில் எழும் வெறுமை, நிச்சயமற்ற தன்மை அன்னையின் மனதை கனமாக்கியது. ஏர்னெஸ்டோ தனக்கு அருகேயே இருந்து ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை அன்னனயை வாட்டியது. இணைந்திருந்த வேளைகளின் சிறப்பு பிரிவில் தெரியும் மானிட பாசத்தின் இயல்பு ஏர்னெஸ்டோவின் அன்னைக்கும் ஏற்பட்டது.

ஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என அனனத்தையும் கடந்து காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் நகரை விட்டு வெளியேறியது. கடந்து செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்து பறந்துகொண்டே இருந்தது. இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் அட்லாண்டிக் பெருங்கடலும், காதோரம் கிழித்து செல்லும் காற்றும் ஏனெஸ்டோவை கவர்ந்தது. பல மணிநேரங்களில் சந்திக்க இருக்கும் தனது மனம் கவர்ந்த காதலியை நினைத்தபடியே ஏர்னெஸ்டோ காற்றில் மிதந்தபடி பயணம் போகிறார்.

இந்த இளம் வாலிபனின் மனதை கொள்ளைகொண்ட நாயகி யார்?

1 comments:

charlas,  February 5, 2010 at 5:28 PM  

supper pa ....i know he is the one of the samrat

""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா

MEMBERS

Kokilam Teacher Farewell Day, Kavalkinaru

http://www.youtube.com/watch?v=LH80Q35Ykrw&feature=colike

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP